தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
10/10/2010.
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
இன்று தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள். இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் சமூக அடக்குமுறைக்கெதிராகவும் போராடப்புறப்பட்ட தமிழீழப் பெண்களுக்கு வழிகாட்டியான வித்தொன்று வீழ்ந்தநாள். பெண்களால் இயலாதென மூலையில் முடங்கிக் கிடந்த ஒரு சமூகத்திலிருந்து வீறுடன் புறப்பட்டுவந்து விடுதலைப் போர்தொடுத்த பெண்களின் புரட்சிகர நாள்.
எமது விடுதலை இயக்கத்தில் களச்சாவடைந்த முதற் பெண்போராளியான இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி (பேதுறு சகாயசீலி) அவர்களின் நினைவுநாளே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகும். எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் தந்திரத்தோடும் நாசகாரத் திட்டத்தோடும் கால்பதித்திருந்த அந்நியப் படைகளுக்கெதிரான போரில் இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி அவர்கள் வீரச்சாவடைந்தார். இனவிடுதலை, பெண்விடுதலை, சமூகவிடுதலை என்ற கோட்பாட்டுத் தளங்களில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் ஆயிரமாயிரம் பெண்கள் பங்குகொண்டு எமது போராட்டத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.







